Friday, August 10, 2012

நிம்மதியை தேடி..!

கொம்பு முளைத்த செல்போன் மறந்து
தம்பு (Thumb) தடவிப் பேசிக்கொண்டிருக்கிறோம்!

சட்டை சுரண்டிப் பணம்தேடுவதை மறந்து
அட்டை சுரண்டித்(Credit Card) தேடிக்கொண்டிருக்கிறோம்!

முகம் பார்த்துச் சிரிக்க மறந்து
முகப்புத்தகம் (Facebook) பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறோம்!

ஹிம்... எழுதுகோள் பிடிக்க மறந்து
இப்படி எலிக்குட்டி(Mouse) பிடித்துக்கொண்டிருக்கிறோம்!

அவளும், அவள் செல்லக்குட்டியும்..!


இருள் விலகுகிற நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை..! எத்தனையோ நாட்கள் இந்த அலுவலக வாயிலை கடந்து சென்றதுண்டு. இன்று அதிகாலை அலுவல் முடிந்து நண்பர்களிடம் விடை பெற்று நான் என் அலுவலக வாகனங்கள் நிற்குமிடம் தேடி வெளியே வந்தேன்..!இருள் அடர்த்தியாக இருப்பதாய் தோன்றியது..! அங்கும், இங்கும், எங்குமாய் மனிதன் ஜீவன்களின் அசைவுகள் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பிக்கொண்
டு பாயும் வாகன படையெடுப்பு ஆரம்பமாகவில்லை..!

நான் மெதுவாக நடக்க தொடங்கினேன்...! வாகன கூடத்தில் நடமாட்டம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே இருந்தது. முகங்கள் தெரியுமளவுக்கு வெளிச்சம் பரவத் தொடங்கவில்லை.. இருப்பினும் மங்கிய மஞ்சள் நிற சோடியம் மின் விளக்குகள் எங்களை மொய்த்துகொண்டுதானிருந்தது..!

அங்கிருக்கும் வாகன கண்காணிப்பாளரிடம் என் வாகன என்னை கேட்டறிந்தபின், வாகனத்தை நோக்கி மெல்ல நடக்கலானேன். அப்போதுதான் அந்த நாய்க்குட்டியின் அசைவை கவனித்தேன்..! எங்கிருந்தோ என்னை நோக்கி மிக வேகமாக ஓடி வருவதாய் தோன்றிற்று..! ஒரு கணம் யோசித்தேன். கண் திறந்ததும் தள்ளாடியபடி நடமாடத் தொடங்கும் பருவம் தானிருக்கும்..! ஆனால், தனக்கு இருப்பது நான்கு கால்கள் அல்ல நாற்பது கால்கள் என்பது போன்றதொரு வேகத்தில் என்னை நோக்கி வருவதாய் கண்டேன்.

நாய்கள் மீது எனக்கு பெரிதாக ஒரு பற்று இருப்பதாக நான் அறியவில்லை. என் வீடு அருகேயுள்ள சில நாய்கள், அவற்றை கடக்கும் போது குறைபதுவுண்டு..அப்போது அவற்றின் மீது கல்லெறிந்தும் இருக்கிறேன்..! என் அலுவலக வளாகத்திலே என் நண்பர்களுடன் இடைவேளைபோது சில நாய்களுக்கு நாங்கள் உண்ணும் தின்பண்டங்களை பகிர்ந்தளித்த ஞாபகமும் உண்டு.. மற்றபடி நாய்களுக்கும் எனக்கும் பெரிதாக பாசப்பினைப்பு இருந்தது கிடையாது..!

ஆனால், இப்போது ஒரு நாய்க்குட்டி எங்கிருந்தோ இருட்டிலிருந்து இவ்வளவு கூட்டத்தில் என்னை நோக்கி வருவதைப்போல் கண்டேன்..!ஒரு நொடி பொழுதில் என் மனம் அங்கிருந்து நகர்ந்து பொய் விடும்படி நினைத்ததுவும் உண்மை..! அதை தான் என் மூளையும் உத்தரவிட்டது..!

என்னவோ ஒரு சிங்கம் என்னை நோக்கி பாய்ந்துவருவதை போல் நான் அங்கிருந்து நகர்ந்து ஓடினேன்..! பின் அந்த நாய்க்குட்டி என்னிடம் வருகிறதா என தெரிந்துக்கொள்ள திரும்பி பார்த்த நான், இருட்டில் இருந்து ஓடி வெளிச்சம் கண்டது அந்த நாய்க்குட்டி.. ஆனால் வெளிச்சதில்லிருந்து கொண்டே இருட்டை கண்டது நான் மட்டுமே என உணர்ந்தேன்..!

வேகமாக ஓடி வந்த நாய்க்குட்டி, என்னை பார்த்து வரவில்லை..என் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்து ஓடி வந்தது என்பதை நான் புரிந்துக்கொண்டேன்..! வந்த வேகத்தில் அந்த நாய்க்குட்டி, நின்றுகொண்டு தன் இரு கைகளை நீட்டி அணைக்க காத்திருந்த அந்த பெண்ணின் கால்களை பற்றி அவள் மேல் தாவி ஏற முயல..அந்த பெண் அந்த நாய்க்குட்டியை தன் சிறு குழந்தையை தூக்குவதுபோல அழகாக, லாவகமாக தூக்கி கொஞ்சிகொண்டிருந்தாள்.

அதுவரை ஏதோ ஒரு தெருநாய் குட்டியாய் என் கண்களுக்கு காட்சியளித்த அந்த நாய்குட்டி.. இப்பொழுது, பிறந்த குழந்தை யாருடைய அறிமுகமும் இல்லாமல், தன் அருகே கிடத்திவைக்கப்பட்டுள்ளவள் தான் தன்னுடைய அன்னை என்றறிந்து அவளின் ஸ்பரிசத்துடன், அவளின் வாசத்துடன் அவள் மடிதேடி ஒட்டிக்கொள்ளும் விந்தையாய் மட்டுமே தெரிந்தது..! இது அந்த பெண்ணால் அந்த நாய்குட்டிக்கு கிடைத்த ஸ்பரிசம் இனிதே விளக்கியது..!

அவள் கைகளில் அந்த நாய்க்குட்டி தவழ்ந்த போது.. அதன் தத்தளிப்பும், உலகமறியாத குழந்தையும் வெகுளித்தனமும் காண முடிந்தது..! அந்த சிறு நாய்க்குட்டியின் உருவம், அதன் மடிந்து தொங்கும் காதுகளும், ஒளி புகுந்து வெளிப்படும் கண்களும் வெகுவாக கவர்ந்தது..! கண நேரத்தில்.. அந்த பெண்ணால் அந்த நாய்க்குட்டியும், அந்த நாய்குட்டியால் அந்த பெண்ணிற்கும் நடந்த அன்பு பரிமாற்றம்.., நான் மட்டுமல்லாது என்னை போல் பலரும் கூடி நின்று அந்த பாசப்பகிர்வை பார்த்துக்கொண்டிருந்தோம்..!

நாய் உடம்பின் மேலே வந்து ஏறுவது என்னால் சகித்துக்கொள்ள முடியாத கஷ்டம் என்று என்னை போல் நினைத்துகொண்டிருந்த பலரும் இன்று நினைத்திருப்போம்..ஒரு நாய் நம்மிடம் கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்தக்கூட நாம் தான் அதற்கு கற்றுதருகிறோம்..!இன்னபடித்தான் செய்வேன் என்று அது சொல்வதில்லை.. அப்படி இருப்பின், எந்த காரணத்தினால் இந்த சிறிய உருவம் கொண்ட ஜீவனிடம் இருந்து அந்த நட்புறவை நாம் கற்றுக்கொள்ள கூடாது என என் உள்மனம் ஓங்கி அறைந்தது...!

உண்மையில், நாய் என்பது ஒரு பயங்கரமான உயிர் தான்..!ஆனால், எந்த அளவுக்கு அதன் நலனில் நாம் பொறுப்பு எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு அது நம்மிடம் சீரான அளவில் பாசத்தை வெளிப்படுத்தும் என்பதை, அந்த பெண்ணும் அவள் செல்லக்குட்டியும் எனக்கு உணர்த்த தவறவில்லை! அங்கே நடந்தவற்றை நினைத்து கொண்டே என் வாகனத்தை தேடி மெல்ல நகர்ந்தேன்..!

மீண்டும் ஒருமுறை முதல் வரி..! இருள் விலகுகிற நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை..! என் மனதிலும், வானத்திலும்.. இருள் மெல்ல விலகதொடங்கி இருந்தது!!

சொர்கத்தின் வாசனை.!!

எதை தொலைத்தேன் என்பதை மறந்துவிட்டு,
தேடிக்கொண்டிருந்தேன் எதையோ..!
திடீரென.. 
இலேசாய் உணர்கிறேன்.
சொர்கத்தின் வாசனை.!!
அவள் என்னை கடந்து செல்கின்றாள்..!

வெட்கப்படுகிறது நிலவு!

அவளுடன் உலவிக்கொண்டிருந்தேன்..!
தூரத்தில்.. நிலவு!
பக்கத்தில்.. அவள்!
நிலவும் அவளும் ஒன்றே என்றேன்,
வெட்கப்படுகிறது நிலவு!

Monday, August 6, 2012

நாளையும், நீ வருவாயா?

அதிகாலை 3 மணிக்கு தொடங்கினேன்..இரண்டு மணி நேர தொடர் ஓட்டத்திற்கு பிறகு மெத்தையில் சாய்கிறேன்..!  இது நான் உடல் இளைப்பதற்காக ஓடிய ஓட்டம் அல்ல..! என் மனம் இளைப்பாற ஓடிய ஓட்டம்..! என்னிடம் இருந்தே, என் மூளையிடம் இருந்தே எனக்கு ஒரு இடைவேளை வேண்டி இருந்ததால்.. ஓடிய ஓட்டம்..! 


இது தான் நான் அதிகாலையில் ஓடும் முதல் ஓட்டம்..!  தொடர்ந்து ஓடினேன்.! 

என்னுடன் யாரும் அந்த தெருவில் இருக்கிறார்களா என்று பார்த்தேன்..! யாரும் இல்லை. அது ஒரு அமைதியான ஓட்டமாக இருக்கவேண்டும் என்பதாலும்.. என் மனம் நிலையாய் இருக்கவேண்டும் என்பதாலும் எந்த இசை உபகரணங்களும் நான் உபயோகப்படுத்தவில்லை.

ஓடும்போது, எனக்கு முன்னால் இரண்டு கண்கள் மட்டும் என்னை பார்த்துக்கொண்டே இருப்பது போல் இருந்தது. அதெப்படி..! வெறும் கண்கள் மட்டும்?? என யோசித்தேன். ஆனால் இந்த பார்வை எனக்கு பரிச்சயமானது போலவே இருந்தது! அந்த கண்கள் மிக பெரியதாக, அழகானதாகவும் இருந்தன. இன்னும் இருள் நீங்காத அந்த மரங்கள் அடர்ந்த சாலையிலும், மின்சார விளக்கின் வெளிச்சம் குறைவாக இருக்கும் குறையை நீக்கிட நிலவினை கோலி குண்டு அளவிலாக இரு துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து எனக்கு முன் யாரோ எடுத்து செல்வதைப்போல் இருந்தன அந்த கண்கள். வெகு சீராக மின்னல்கீற்று போல செதுக்கிய புருவம்.. அதனால் தானோ என்னவோ! மின்சாரம் போல ஏதோ ஒன்று என்னுள் ஊடுருவிசெல்வதை என்னால் உணரமுடிந்தது..! அந்த பார்வை ஒரே சீராய்..என் முன்னால் இருந்து பின்னும், வலமிருந்து இடமும், இடமிருந்து வலம் என மாறி மாறி என்னை கடந்து செல்வதை காணமுடிந்தது. 

அந்த பார்வை, அழகாக இருந்தாலும், வசியம் செய்யும் விதமிருந்தாலும், "என் பின்னால் தொடர்ந்து வராதே" என்று எச்சரிப்பது போல இருந்தது. ஆனால், என் தேடல் தொடங்கியதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஓடிய களைப்பில் மூச்சிரைக்க, ஒருகணம் நின்றேன்..! என்னுடன் ஓடிவந்த களைப்பில்லாமல்..மாறாக களிப்போடும் கனிவோடும் தோன்றியது அந்த பார்வை.

"யார் நீ ?" என்று கேட்டேன்.

"கண்கள் என்றாவது பேசி இருக்கிறதா?" என்று கேட்பது போல் பார்த்தது அந்த கண்கள்.

"உன் கண்கள் பேசுவதை நீயே அறியவில்லையா! ஆச்சர்யம் தான்..!" என்று சொன்னேன்.

"ஏளனம் வேண்டாம். திரும்பி செல். நீ வெகு தூரம் எனை பின் தொடர்ந்து வந்து விட்டாய். என்னை பின் தொடர்ந்தால் நீ வழி தொலைப்பாய். ஆகவே திரும்பி செல்" - இப்படி பேச எண்ணியதோ என்னவோ! எனக்கு அப்படி தான் தோன்றியது அந்த கண்களை பார்க்கும் போது.

"ஏன்..! உன்னுடன் ஓடுகையில் எனக்கு தூரம் தெரியவில்லை.மாறாக, மேலும் ஓட தோன்றுகிறது. நீயும் என்னுடன் திரும்பி வா. இவ்வளவு பிரகாசமான, அமைதியான, ஆறுதலான கண்களை நான் பார்த்தது இல்லை" - என்று கூறினேன்.

"உன் கண்களை நீ பார்த்தது உண்டா? - என பதிலுக்கு கேள்வியை எழுப்பியது அந்த கண்கள்.

"பார்த்திருக்கிறேன். அவைகளுக்கென்ன?" என்று கேட்டேன்.

"உன் கண்கள்.. எதையோ தொலைத்துவிட்ட உணர்வை கொடுக்கின்றன. ஏனோ ஒருவித தவிப்பும் தேடலும் இருப்பதை உணர்கிறேன். அவற்றில்   வலியினையும், கேள்விகளையும், சிறு பயமும், மகிழ்ச்சியும், இழையூடுவதை காண முடிகிறது." - என்றது.
"என் கண்களில் உன்னால் இவ்வளவு காணமுடிகிறதா? என்ன சொல்கிறாய். வேறேதும் தெரியவில்லையா?" - நான் கேட்டேன்.

" ஆமாம்! அவை எல்லாம் என்னால் காணமுடிகின்றது. இவற்றுடன் மெல்லிய காதலும் தென்படுகிறது " - அந்த கண்கள் பதிலளித்தது.

"என் கண்களில் இருக்கும் இத்துனையும் ஒருசேர இதுவரை நான் அறிந்ததில்லை..! ஆனால் இன்று என்னால் முடிகின்றது. நீ என்னுடன் வந்துவிடு."- என்றேன் நான்.

"நான் யாருடைய கண்கள், இதுவரை யாருக்காக அழுதிருந்தேன் என்றும் உனக்கு தெரியாது. இன்று உன்னுடன் வந்துவிட்டால், என்னுடன் சேர்ந்து உன்னிரு கண்களும் கலங்குவதை நான் காண தயாரில்லை. இந்த விழிகள் உன் முகத்திற்கு பொருந்தாது. ஆகையால், உன்னுடன் வர இயலாது." - அந்த கண்கள் பேசியது.

"நீ சொல்வது நியாயம் தான்! திடீரென வந்து "வா என்னுடன்" என்று சொன்னால், எப்படி வருவாய். அது சரி. நாளை வருகிறேன். நாளை மறுநாள் வருகிறேன். நாளை முதல் தினமும் வருகிறேன். ஆனால், உனக்கு தெரியுமா? நீ சொல்வது போல் உன் கண்கள் அழுவதற்கான கண்கள் அல்ல. அவை அமுதத்தில் தோய்த்தெடுத்தவை. அவற்றிற்கு ஆனந்தத்தை கொடுப்பது என் பொறுப்பு. வந்துவிடு என்னுடன்." - என்றேன்.

"பித்தன் போல பிதற்றாதே! வேண்டுமானால், நான் உனக்கு வேறு அழகானதொரு கண்களை கண்டுபிடிக்க உதவுகிறேன். சரியா?" - புரியாமல் பேசியது அந்த கண்கள்.

"பித்து பிடித்தவன் பித்தன் தானே..? பித்தம் தெளிய ஒருவனுக்கு தேவை மருந்து தான். மாற்று மூளையில்லை. நான் உன்னிடம் உன்னை கேட்பது மருந்தாக தான். ஆனால் நீ எனக்கு சொல்வது "மாற்று மூளையை" பற்றி." - பிடிவாதம் பிடித்தேன்.

"என் கண்கள் பொருத்தப்பட்டால்..நீயும் அழுவாய். என்கிறேன் நான்..இது ஏன் உனக்கு புரியவில்லை?" - கோபமாய் கேட்டது கண்கள். அந்த கோபத்தின் உச்சம் அந்த நிலவு போன்ற கண்களை செவ்வாய் கிரகம் போல சிவக்க செய்தது.

"என்னுள் பொருத்தப்பட்ட உன்னால் நான் அழுவேனாயின், அதை துடைபதற்கு இரண்டு கைகளும், மேலும் அழாமல் தடுப்பதற்கு ஒரு இதயமும் இருக்கிறது. அதை வேண்டுமாயின் உனக்கே தருகிறேன்." - என்றேன்.

"உனக்கு புரியவைக்க முடியாது. நான் வருகிறேன்." என்று திரும்பி செல்ல எத்தனித்த அந்த கண்களிடம் இப்படி கேட்டேன் "கொஞ்சம் நில்! நாளையும், நீ வருவாயா? என்னை இன்று பார்த்தது போல பார்ப்பாயா?"

பதில் சொல்லாமல் அமைதியாய் எனை பார்த்த அந்த கண்கள் பதிலேதும் சொல்லாமல் மறைந்துபோனது. 

அந்த கண்கள் எனை பார்த்த அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தாலும், நான் தேடும் பதிலும் ஒளிந்திருப்பதை நான் காண தவறவில்லை. ஏனோ, எதற்கோ பயத்துடன் பிரயானிக்கும் அந்த கண்கள் இருட்டோடு இருட்டாகவே உலாவர நான் விரும்பவில்லை..! காதல், மகிழ்ச்சி, கனவு, உற்சாகம் என எல்லாவற்றையும் நான் தர தயாராயிருக்கிறேன் பதிலுக்கு அந்த கண்கள் எனக்கு கண்ணீரை பரிசளித்தாலும் பரவாயில்லை. நாளை மட்டும் அல்ல, என்றாவது ஒருநாள் அந்த கண்கள் எனை மீண்டும் தேடிடும் அது வரை என் ஓட்டம் தொடரும் என வீடு வந்து சேர்ந்தேன். 

என் தேடல் தொடர்வதை நான் உணர்கிறேன்..! ஆனால் இம்முறை என் தேடலுக்கான பொருள் அறிந்து கொண்டேன்.

Friday, August 3, 2012

அக்காஆஆஆஆஆஆ.... கீரைஈஈஈஈஈஈஈஈஈஈ....!!



பேஸ்புக்... என் வாழ்வின், என் தூக்கத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து கொண்டிருப்பதை கண்டும் காணாமல், உள்ளே பூஜை அறையில் இருந்து எழும்பும் அதிகாலை சுப்ரபாதம் தாண்டி இனிக்கும் என் அம்மாவின் திட்டுக்களை ரசித்து கொண்டே.., ஜன்னல் வழி எட்டி பார்த்தேன்..! எனக்கு மிக பிடித்த கருநீல வண்ணம் களைந்து, ஏதோ கொஞ்சம் சுமாராக பிடித்த இளம் நீல நிறம் கொண்ட உடையை உடுத்த தயாராகும் வானத்தை பார்த்ததும்.., உடனே என் கண்கள் கடிகாரத்தை தேடி திடுக்கிட்டது..!!

மணி, 6 -ஐ தாண்டி 7 -ஐ நோக்கி எழுபது கிலோமீட்டர் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது..! "ச்ச..! இந்த மாதிரி என்னைக்காவது இந்த பாழா போன நேரம் இந்த வெள்ளைக்காரன்/காரி கூட டெலிபோன்ல மொக்கை போடும் போது இவ்வளவு வேகமா போகுதா..! வீட்ல இருந்த மட்டும் எப்புடியோ நேரம் வேகமா போகுது" என்று அன்றாட பாட்டை தொடங்கினேன்..!!

"அக்காஆஆஆஆஆஆ.... கீரைஈஈஈஈஈஈஈஈஈஈ....!!" என்று ஒரு கீச்சு குரலின் அலறல் கேட்டு எழுந்தேன்..! "அவன்கிட்ட ரெண்டு கட்டு வாங்கிகிட்டு நாளைக்கு முருங்கை கீரை கிடைத்தால், கொண்டு வரச்சொல்..!" எனகூறி விட்டு அதிகாலை பூஜையில் ஐக்கியம் ஆனாள் அம்மா..!

வாசல் வந்ததும்.. அங்கே ஒரு பத்து வயது பெறுமானமுள்ள ஒரு சிறுவன் நின்று கொண்டு இருந்தான்..!!

மிகச்சிறிய உருவம்..! ஒல்லியான உடல் அமைப்பு..! அவன் தலை முடி நன்கு காய்ந்து, வறண்டு இருந்தது..! எப்படியும் வாரக்கணக்கில் எண்ணெய் இடப்படாமல் லேசாக செம்பட்டை தட்டி இருந்த தலைமுடியுடன் நின்றிருந்தான்..! பெயரளவில் ஒரு சட்டை அணிந்திருந்தான், அவன் அரைக்கால் சட்டை அவனது ஒல்லியான இடுப்பில் நிற்கமாட்டேன் என கழண்டுவிட பார்த்துக்கொண்டிருந்தது..! அதை தடித்த முருங்கைக்காய் போன்ற ஒரு கையால் பிடித்து நிறுத்து இருந்தான். மேலும்.. இடுப்பில் நிற்காத அவன் கால்சட்டையை.., புதுவிதமாக..ஒரு நைலான் கயிறு கொண்டு இடுப்பில் கட்டி இருந்தான்..! பார்ப்பதற்கு பழைய காலத்து துணியால் நெய்யப்பட்ட பொம்மை போல் காட்சி அளித்தான்..!

என்னை பார்த்ததும் லேசாக சிரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டே சிரித்தான்..!

நான் அவனிடம் இரண்டு கட்டு கீரை வாங்கி கொண்டு அவன் கேட்ட இருபது ரூபாய்களை அவனிடம் நீட்டினேன்..! அதை வாங்கிகொண்டு திரும்பி செல்ல தான் கொண்டுவந்த மீதமுள்ள கீரைகட்டுகளை சுமக்க தயாரானான்..!

அவனிடம்.."த்தம்பி...! உன் பேரென்ன?" என்று கேட்டேன்..! அதற்கு.. "மன்சூர்..ண்ணே " என்றான்..! என்ன வயசுடா தம்பி உனக்கு என்றேன்..! அதற்கு எங்க அம்மாக்கு தான்னே தெரியும்.." என்று லேசாக சிரித்து கொண்டே சொன்னான்..!

"சரி படிக்கிரியாடா மன்சூர்.., எந்த வகுப்பு படிக்கிற?" என்று கேட்டேன்..! இல்லன்னே..இப்போ தான் ஊர்லேந்து கூடியாந்தாங்க..! அப்பா செத்து போயிட்டாரு.. எங்க மாமா இங்க கடை வச்சிருக்காரு..! அவரு கடையில தான் வேலை பாக்குறேன், அம்மாவும் அக்காவும் இங்க வீடு வேலை செய்றாங்க" னு வேக வேகமா சொல்லி முடித்தான்..!

சொல்லி முடித்த வேகத்தில்.., கீழே இருந்த கீரைக்கட்டுகளை தூக்கசென்றான்..! அவன் கையில் ஏதோ தீப்புண் யாரோ சூடு வைத்தது போல இருந்தது..!"என்னடா மன்சூரு..? கையில என்ன புண்ணு? " என்று கேட்டேன்..! ஒரு நொடி தன் கையை பார்த்த அந்த பிஞ்சு.. "அதுன்னே.. நைட் பக்கத்துக்கு வீட்டு அண்ணன் பில்லா படம் சீடீ போட்டுச்சு.. நானும் புல் -ஆ பார்த்தேன்.. காலைல மாமா கடைக்கு போகும் போது எழுப்பினாரு.. நான் தூங்கிகிட்டே இருந்ததுல.. பீடியால சுட்டுபுட்டாருண்ணே..!" என்று சொன்னான்..!

அவன் சொல்லும் போது.. அவன் கருத்த முகம்..சிவந்து வீங்குவதையும், கண்கள் லேசாக கலங்குவதையும் பார்த்தேன்..!

அவனிடம், "ஏன்டா? அம்மா மாமாகிட்ட எதுவும் கேக்கலியா? " என்று கேட்டேன்..!

"இல்லைனே..அம்மா காலையிலேயே வீட்டு வேலை செய்ய போய்டுச்சு..! இனி மத்தியானம் மூணு மணிக்கு தான் வரும்..! அப்படியே அம்மாகிட்ட சொன்னா.. அம்மா அழத்தான் செய்யும்..! இல்லேன்னா எதாச்சும் கேட்டா மாமா எங்கள ஊருக்கே விரட்டி விட்ருவாரு" என்றான்.

அரை நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை..! எதாச்சும் சாப்டியாடா?? என்று கேட்டதற்கு.."இல்லைனே, கீரையெல்லாம் வித்துட்டு கடைக்கு போக மணி ஏழரை எட்டாயிடும். அப்புறம் ஒம்பது மணிக்கு மாமா இட்லியும், டீயும் வாங்கித்தருவார்..!

சரி டா.. இப்போ எதாச்சும் சாப்பிடுறியா என்று கேட்டேன்..! இல்லைனே அதெல்லாம் வேணாம்னே" என்று குழந்தைகளுக்கே உரித்தான ஒரு கூச்சம் கலந்த சிரிப்புடன் சொன்னான்..! அவன் சிரிப்பு.. எனக்கு ஏதோ வலியை தந்தது..!! தன் வலியையும், தன் பசியையும் தாங்கிக்கொண்டு, வாழ்கை பரிசளித்த பொறுப்புகளை தான் கொண்டு வந்த கீரைக்கட்டுகளுடன் சேர்த்து சுமக்கும் அந்த சிறுவன் எனக்குள் பெரும் வலியை ஏற்படுத்தினான்..!

என்ன தோன்றியதோ தெரியவில்லை எனக்கு, உடனே "இருடா..இதோ வரேன்..!" சொல்லிட்டு வீட்டுக்குள்ள வேகமா போனேன்..! நேரா அம்மாகிட்ட போய் எதாச்சும் சாப்பிட இருக்கா?" என்று கேட்டேன்..! என்னை ஆச்சர்யத்துடன் பார்த்த அம்மா.. "இல்லையேடா.. நூடுல்ஸ் செஞ்சு தரவா..? சாப்பிடுறியா?" என கேட்டாள்..!

நான்,  "இல்லை வேண்டாம்!" என்று சொல்லி விட்டு பிரிட்ஜ் -இல் இருந்த வாழைபழத்தை பார்த்தேன்..! "அம்மா, இந்த வாழை பழம்..???" என்று கேட்பதற்குள்.."டேய்.. அது சாமிக்கு பூஜை செய்ய வச்சிருக்கேன்..கொஞ்சம் இரு.. ரொம்ப பசிச்சுதுனா..நூடுல்ஸ் செஞ்சுதறேன்"...னு சொன்னாள்..!

அவள் அங்கிருந்து வருவதற்குள் இரண்டு பழங்களை பறித்து அவனிடம் நீட்டினேன்.. அதற்கு "இல்லன்னே.. வேணாம்னே..!" என்று மறுபடியும் கூச்சத்துடன் மறுத்தான்..! "டேய்.. பிடிடா !" என்று அவன் கையில் திணித்தேன். "தேங்க்ஸ்னே" என்று தன் கால்சட்டைப்பையில் அப்பழங்களை செருகினான்..!

"ஏன்டா! சாப்பிடலையா..?" என்று கேட்டதற்கு.."இல்லைனே, கடைக்கு போற வழில தான் அக்க வேலை செய்ற வீடு இருக்கு.. அங்க அக்கா கிட்ட ஒன்னு குடுத்துடுவேன்" என்றான்..! இம்முறை யோசிக்கக்கூட தோன்றாமல், அங்கிருந்த மேலும் ஐந்தாறு பழங்களை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அவனிடம் நீட்டினேன்..! அவன் முழித்தான்..!

"இல்லைடா..! முடிந்தால்.., உன் அக்காவிடம் கொடுத்து உன் அம்மாவிற்கும் கொடுக்க சொல்" என்று சொன்னேன்..! இம்முறை கூச்சம் ஏதும் அறியாது.. முகம் முழுதும் மலர்ச்சியுடன் வாங்கிக்கொண்டான்..! "ரொம்ப தாங்க்ஸ்னே.. மணியாச்சு.. நான் போலைனா மாமா தேடிட்டு வந்துடுவாரு" னு கிளம்பியவனிடம்.. மேலும் பத்து ருபாய் நோட்டு ஒன்றை கொடுத்தேன்..!

திணறிய அவன்.. "எதுக்குஅண்ணே ?" என்று கேட்டான்.

"நீ எதாச்சும் வாங்கி சாப்பிடுடா.." என்று கூறினேன்..! அதற்கு அவன் "இல்லைனே.. எங்க மாமா கண்டுபுடிச்சாருன்னா.. என்னடா? கடை கல்லாவிலே திருடினியா னு கேப்பாரு. அதனால காசெல்லாம் வேணாம்னே.." என்று சொன்னான்.!

கலங்கி போனேன்..!

சரி மன்சூர்..! அப்படி என்றால் இன்னும் இரண்டு கட்டு கீரை கொடு என்று மேலும் ஒரு பத்து ரூபாயை அவனிடம் கொடுத்தேன்.. வாங்கிக்கொண்டு..சந்தோசமாக "தாங்க்ஸ்னே.. நான் நாளைக்கு வரேன்..லேட் ஆச்சு" னு ..டாட்டா சொல்லி கிளம்பினான்..!

கை நிறைய கீரை கட்டுக்களுடன்.., மனம் நிறைய நீர்க்கட்டுகளுடன்..உள்ளே நுழைந்த என்னை பார்த்த அம்மா "என்னடா! இது?? ரெண்டு கட்டு தானே வாங்க சொன்னேன். எதுக்கு நாலு கட்டு?? என்று கேட்டாள். குழம்பு, பொரியல், கூட்டு எதாச்சும் செய்யுங்கம்மா. அப்புறம்.. நாளைல இருந்து தினமும் கீரை வாங்குங்க" என்று சொல்லிவிட்டு கணினி அருகே வந்தமர்ந்தேன்..!

சிறிது நேரம் கழித்து வேகமாக வந்த அம்மா "அங்க பிரிட்ஜ்-ல இருந்த வாழைபழத்த என்னடா பண்ண? நான் சாமிக்கு பூஜை பன்ன வாங்கி வச்சிருந்தேன்.. உனக்கு தான் நான் நூடுல்ஸ் செஞ்சு தரேன்னு சொன்னேன்ல..! அதுக்குள்ளே எல்லா பழத்தையும் சாப்டியா? சாமிய விட அப்படி என்ன உனக்கு பசி??" என்று செல்லமாக கோபப்பட்டாள்.

அம்மா என்னிடம் கேட்ட "சாமியை விட உனக்கென்ன அப்படி ஒரு பசி"  என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை! இதைத்தவிர...

“காரணமின்றி முதலாளி சூடுவைத்தபோதும், மௌனமாய் சிரிக்கும் சிறுவனின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது, அவன் குடும்பத்து வறுமை! அதை விட அந்த நேரத்தில் கடவுள் எனக்கு பெரிதாக படவில்லை!”

Sunday, July 22, 2012



கடற்கரையில்...
என் கை எனும் தூரிகையால்
தீட்டப்பட்ட ஓவியம்..
உன் பெயர்..!

கடல் மணலில்..
என் கையிலிருந்து 
உதிர்கின்ற 
உனது பெயரின் எழுத்துக்கள்..!

விரைந்து வரும் ...
அலைகளைப் பார்த்துப்
பயந்தபடி....
என் கைகளில் ஏற முயல்கிறது...
உன் பெயர்.

ஏனோ...
தயங்கித் தரை பார்க்கிறது.
வெறுமைப் பார்வையோடு நான்.

தடுக்க இயலாத என்னைத் தாண்டி...
அலைகளால் கலைந்து...
அழுதபடி செல்கிறது உன் பெயர்...
கடலுக்குள்...
முதல் நாள் பள்ளி செல்லும்
சிறு குழந்தைகள் போல.

இந்தக் கணத்தில்...
என்னை மறுக்கவும் இயலாமல்..
ஏற்கவும் இயலாமல்...
தவிக்கும் உன் முகமாய்...
மாறுகிறது
எனது முகம்.....

Saturday, July 14, 2012

இடையில் வந்து களைந்து செல்லும் கடனாளியே



யாருடைய துக்கத்தை அனுசரிக்க கண்ணீர் சிந்துகிறாய் மேகமே!!?
ஒரு வேலை வானம் தந்த வாக்குறுதியை நம்பி நீயும் ஏமாந்து போனாயோ???
வானத்தில் மிதக்கும் காரணத்தால்..
நீ ஒன்றும் வானத்திற்கு சொந்தமில்லை, வானமும் உனக்கு சொந்தமில்லை...!
நீ கூடி, இடித்து, மழையாக கண்ணீர் சிந்தினாலும்...
வானத்திற்கு நீ "இடையில் வந்து களைந்து செல்லும் கடனாளியே!!"


மனம் மரணமடைந்தது !!!















உன் வாசம் படிந்த கைக்குட்டை...
உன்னுடன் கண்டு களித்த சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ கைபேசியில் அனுப்பிய முத்தங்கள்.. என 
உன்னை மட்டுமே நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என நான் பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும் 
நினைவுச் சின்னங்களாய் மட்டுமே போய் விடுமோ என
சத்தியமாய் நான் நினைக்கவில்லை...

என் வசந்த காலத்தின்
ஒரு பக்கம் முற்றிலும்
இலையுதிர் காலமாய் மாறிப்போனது..!

நீ எதை சொன்னாலும் 
அப்படியே நம்பிவிடும் மூடன் நான், 
என்று தெரிந்துதான் சொன்னாயோ..?
இதயத்தில்.. 
திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய 
இரக்கமில்லாத...
கொடூரமான... 
அந்த 
"பிரிந்து விடுவோம்" 
என்ற வார்த்தையை..??

"மனம் மரணமடைந்தது" என்ற ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்கிறேன் இன்று ...!


விடையறியாமல்..!!



















வெகுதூரத்தில்
சிறு புள்ளியாய் உன் உருவம்…
இருந்தும்,
நீ விலகிச் சென்றதை
நம்ப மறுத்து
அசையாமல் அவ்விடமே
காத்து நிற்கும் எனது கால்கள்!!!

ஓயாமல் ஒதுங்கியும்
உன்னுடன் கழித்த
மணித்துளியை
புரட்டத் தவறாத என் மனம்…
இருந்தும்,
அருகில் இருப்பவர் கண்டும்
ஈரம் காய மறுக்கும்
எனது கண்கள்!!!

உனது பெயரை
உச்சரித்தே ஓடும்
எனது எண்ணங்கள்…
இருந்தும்,
எத்தனையோ கேள்விகளுக்கு
விடையறியாமல்
ஒட்டிக்கொண்ட உதடுகள்…
விடைகளுடன்
விக்கியபடி
எனது தொண்டைக்குழி !!!

வெட்கப்படுகிறேன்..!!!


இந்திய பேரரசின் பெருமை மிகு மனிதர்களாய் பெயர் கொண்டிருக்கும், திரு மன்மோகன், திருமதி மீரா குமார், பிரதீபா பாட்டில் போன்ற பொம்மை அரசியல் வாதிகளை நாடு கடத்தினால் என்ன!??? இந்தியாவின் முதல் பெண் சபா நாயகி, முதல் பெண் அதிபர் என்ற பெயர் இவர்களுக்கு எதற்கு..!? மன்மோகனை பற்றி நான் பேசவே விரும்பவில்லை..!

இன்று பாராளுமன்ற கூடத்தில் இந்தியாவின் வெளிப்பாடாக வெளியுறவு துறை அமைச்சரின் கூற்று வெட்ககேடானது..! இலங்கையுடன் வரலாறு சிறப்பு மிக்க நட்புறவு உள்ளதாம். அதனால் இலங்கையை ஆதரிக்கும் எண்ணத்தை கைவிடும் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்!

அங்கேயுள்ள தமிழர்களை காக்க வக்கு இல்லை நமக்கு. இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த அந்த நாட்டுடன் நட்பு பாராட்ட அவசியம் என்ன!??? இதுவே ஆஸ்திரேலியாவில், சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட உடன் அங்கே நேரில் செய்து கூக்குரல் விட்ட எஸ். எம். கிருஷ்ணா இப்போது எங்கே சென்று விட்டார்? பிரான்ஸ் -ல் சீக்கியரின் தலை பாகையை அவிழ்க்க சொன்னதற்கு நேரில் சென்று கண்டனம் தெரிவித்த பொம்மை மனிதர் மன்மோகன், இப்போது ஒன்றரை இலட்சம் தமிழர் அழிக்கபட்டதகு கண்டனம் கூட கூறாமல் என்ன செய்கிறார்!?? இவர்களுக்கு, பாகிஸ்தான் போல ஒருநாள் இலங்கையும் தன் அவதாரத்தை காட்டும் போது தான் தெரியும்... நாம் ஏறி மிதிப்பது நம்முடைய சகோதரர்களின் உயிர் போகும் தருவாயில் உள்ள உடல்களை என்று. அப்போது வருத்தப் படாதீர்கள், அவர்களின் உயிர் போக முதன்முதல் காரணம் நீங்கள் தான் என்று!!!

பன்னிரண்டு வயது சிறுவனுக்கு இருக்கும் நெஞ்சுரம், இந்திய பேரரசின் பெரிய மனிதர்களுக்கு இல்லாததை கண்டு வெட்கப்படுகிறேன்!!

தலைமுறையை தாக்கும் நிறவெறி..!!


மது நாட்டில்.. ஏன்? நமது வீட்டில் கூட நமக்கு தெரியாமல் மிகப்பெரிய சமூக பேரழிவை... நிறவெறியை தூண்டும் போக்கில் ஒரு சமூக விரோத கூட்டம் செயல்படுத்தி வருகிறது..!


"சிகப்பழகு" எனு புதுவித மன வியாதியை  மக்களுக்கு இடையே ஒரு சமூக விரோத கூட்டம் வெற்றிகரமாக விதைத்து வருகிறது..!! இது வெறும் ஆரிய மாயையை மையமாக கொண்டு எழுதபடுவதாக எண்ணவேண்டாம்..!! ஆண்களும் பெண்களும் இன்று fairness கிரீம் பயன்படுத்தும் நோக்கில், கட்டாயத்தில் கொண்டு வந்து விட்டிருக்கும், சுரண்டல் கும்பல் அறிவிற்கு எட்டாத ஒரு பேரழிவை இம்மண்ணுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர்..!


அரை நிமிட இடைவெளி வீதம், அரைமணி பொழுதில் அறுபது விளம்பரங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனங்களும்.. அவர்கள் இந்த சமூகத்துக்கு செய்கின்ற மிக பெரிய தீங்கினை அறியாது அல்லது... அறிந்தும் அக்கறை இல்லாது செயல்படுகின்றனர்...! பொதுவாக இந்த வக்கிர கும்பலின் தீய எண்ணத்திற்கு பலியாவது இன்றைய இளைய சமூகமே..!! 


கருப்பாக இருப்பது என்னவோ தான் செய்த குற்றம் என்பது போல்.. தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் தலைமுறையினர் பலரை கண்டிருக்கிறேன்.. வெள்ளைக்காரன் ஆண்ட போது அவனை வெளிய துரத்தி விட்டு, அவனது தோல் நிறத்துக்காக மட்டும் நம்மையும் நம் நாட்டையும் அடகு வைத்துகொள்வது எவ்விதத்தில் நியாயம்!!??


இந்தியனின் உண்மையான நிறமே கருப்பு தானே!! இன்று மட்டும் எங்கிருந்து வந்தார்கள் .. கருப்பு என்பது தன்னம்பிக்கையின் அடையாளமில்லை என்று சொல்ல??? எங்கிருந்து வாந்தார்கள்.. கருப்பு என்பது அறுவறுப்பு என்று நஞ்சை விதைக்க..!?

சிகப்பாக இருப்பது தான் அழகின் அடையாளம் என்று கூறி நிறவெறி எனும் பேரழிவை சீரிய முறையில் பிரகடன படுத்தி உள்ளனர்... ! இதற்கு சமூக சிந்தினை சற்றும் இல்லாத நடிகர் நடிகைகள்.. கோடியை வாங்கிகொண்டு கொள்ளை நோயை பரப்பிவிடுகிறார்கள்..! 

சமூகத்தில் சாதியை முன்னிறுத்தி ஏற்ற தாழ்வை உண்டாகும் கயவர்கள் மத்தியில்.. நிறவெறி என்னும் கொலை வெறியில் சிக்கி சீரழியும் இன்றைய இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது???

விடியும் பொழுதெல்லாம் சிறு நடுக்கம்...



விடியும் பொழுதெல்லாம் 
சிறு நடுக்கம்...

நிதமும் 
என்னுடன் நான்
எனையறியாமல்
செய்யும் யுத்தம்!!

நான்
தட்டி எழுப்பியும் 
தலையணை தேடி 
தவறவிட்ட
கனவினைத் தேடும் 
மனம்...

விட்டுச்சென்ற
பின்னும்
விடிந்தவுடன் 
என் வீட்டு ஜன்னலுக்கு
ஏங்கும் விழிகள்...

என் மறுப்பை மீறி
உனை
எண்ணிச் சிரிக்கும் 
உதடுகள்...

உன் புகைப்படம் காண 
என் சம்மதம் கேட்டு
சண்டையிடும்
இதயம்...

இழக்காமல் 
இழுத்துப் பிடித்தும் 
தெரியாமல்
தொலைந்து போன
நான்!

கொள்ளையிட்டு 
காணாமல் போன 
நீ!!! 

இதயத்தை
தொலைத்து விட்டேன்.................
தேடியும் புண்ணியமில்லை
நீயே என்னை தொலைத்த பின்
அது இருந்தால் என்ன
இறந்தால் என்ன?????????

நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!
























மஞ்சள் நிற தெரு விளக்கில்,
கரு நிற தார் சாலையில்...
தனியே நடந்து செல்கிறேன்..!

நிறமில்லா மழை துளி நனைத்திருக்க..
முகமில்லா காற்று வருடி செல்ல...
என் அகமெல்லாம் 
உன் நினைவுகள் நிறைந்திருக்க...
உன் நினைவுகள் என் கால்களை பின் நோக்கி இழுத்து செல்ல..
பற்றி பிடித்திட உன் கைகளை தேடியே..
தனியே நடந்து செல்கிறேன்..!

உனக்கு பிடிக்கும் என்பதால்..
பலவற்றை எனக்கும் பிடித்தது..!
ஆனால் இன்று ஏன் எனக்கு மிக பிடித்த உனக்கு 
என்னை அறவே  பிடிக்கவில்லை!!!??

என் கால்கள் கலைத்து போனாலும் 
என் மனம் இன்னும் உன்னை தேடி கொண்டே தான் இருக்கிறது..
ஆமாம்,
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!

உன்னோடு நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையும்..
உன்னோடு நான் பேச என்னும் ஒவ்வொரு வார்த்தையும்..
எனக்குள் ஆயிரம் ஆயிரம் ஒத்திகை காண்கிறது..!
எங்கெங்கோ போகும் சாலையில் 
இறங்கி நடக்கின்றேன்..!
முடிந்துவிட்ட சாலையை வெறித்து பார்த்துவிட்டு..
இங்கேயே இறந்து விடுமோ நம் காதல் என்று..
கண்ணீர் சிந்தியே வழி மறந்து 
நான் இன்னும் தனியே தான் நடந்து செல்கிறேன்..!!

நீ மறந்து விட்ட பல நிகழ்வுகளை 
காகிதத்தில் எழுதி வைக்கவில்லை நான்!!
பாதுகாப்பாய் என் இதயத்தின் 
சதைப்பகுதியில் செதுக்கி வைத்திருக்கிறேன்..!
நேரம் இருந்தால் வந்து எட்டி பார்த்துவிட்டு செல்..!

உனக்கெப்படி தெரியும்..!?
நீ என்னை எப்படி எல்லாம் நேசித்தாய் என்று..!
உன் உதடுகளை கேட்டு பார்..
என் உதட்டை வர்ணித்த கதை சொல்லும்..!

மனமிருந்தால் வந்து சேர்..!
நான் இன்னும் தனியாக தான் நடந்து செல்கிறேன்..!!